மூன்று அம்மாக்கள்



கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான், அம்மாக்களைப் படைத்தார் என்று சொல்வார்களே... அப்படி மூன்று அம்மாக்களைப் பற்றிய படம் இது. இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே ஏகத்துக்கும் சந்தோஷப்படுவார்கள். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தால் கேட்கவா வேண்டும்? எகிப்து அரண்மனையில் தாதியாக இருக்கும் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. அவள் வசதியான யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எகிப்து மன்னரே குழந்தைகளைப் பார்க்க ஆவலாக வருகிறார். ரோஸ், ஃப்ளோரா, யாஸ்மின் என பூக்களின் பெயரைக் குழந்தைகளுக்குச் சூடுகிறாள். மூன்று பூக்களையும் ஆசை ஆசையாக வளர்த்த அந்த அம்மா சீக்கிரமே இறந்து போகிறாள். அதன் பின் அவர்கள் அப்பா வளர்க்கும் குழந்தைகளாக மாறுகிறார்கள்.60 ஆண்டுகளுக்குப் பின் கதை தொடர்கிறது. இப்போது மூன்று சகோதரிகளும் இஸ்ரேல் நாட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாழ்கிறார்கள். அங்கே ஆண்களும் இல்லை. குழந்தைகளும் இல்லை.இளமைக் காலத்தில் பிரபல பாடகியாக இருந்த ரோஸ் கணவனின் அகால மரணத்துக்குப் பின் பாடுவதையே நிறுத்தி விட்டாள். தான் மீண்டும் பாடி இழந்த புகழை மீட்க வேண்டும் என இப்போது ஆசைப்படுகிறாள். ஃப்ளோரா தன் அம்மாவைப் போலவே தாதியாக இருந்து ஓய்வு பெற்றுவிட்டாள். யாஸ்மினின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, ஒரே மாதத்துக்குள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆனால், அவர்களின் வாழ்க்கை பல ரகசியங்களாலும், சில பொய்களாலும் போர்த்தப்பட்டிருக்கிறது. அவற்றை மூவருமே தங்கள் கோணத்தில் எடுத்துச் சொல்வது ஃப்ளாஷ்பேக் ஆக விரிகிறது.ரோஸின் ஒரே மகள் ருச்சா அதே ஊரிலேயே கணவனுடன் வாழ்கிறாள். டாகுமென்டரி படத் தயாரிப்பாளரான அவளது அலுவலகத்துக்கு ஒவ்வொரு அம்மாவும் போகிறார்கள். அவர்கள் தனித்தனியாகக் கூறும் ரகசியங்கள் ஒவ்வொன்றும் ருச்சாவை அதிர்ச்சிக்குள் தள்ளுகின்றன. தன் தாயைப் பற்றி சொல்லப்படும் சில விஷயங்கள், சொந்த அம்மாவின் மீதே கடுங்கோபம் கொள்ளச் செய்கின்றன. கடைசியில் அந்த அம்மாவும் தன் தரப்பு உண்மைகளை அவள் முன் வெளியிடுகிறாள். இடையில் என்னதான் நடந்தது? ரோஸின் இசைப் பயணத்தின் போது ஏற்படும் ஆண் தொடர்புகள் கணவனுக்குப் பிடித்தமானதாக இல்லை. அதனால், குழந்தையோடு வெளிநாட்டுக்குச் சென்று குடியேறி விடலாம் என்று ரோஸை வற்புறுத்துகிறான். அவளுக்கோ சகோதரிகளைப் பிரிந்து செல்வதில் உடன்பாடே இல்லை. ஒரு கட்டத்தில் கணவனா, சகோதரிகளா என முடிவெடுக்கும் சூழ்நிலையில் வெளிநாடு செல்ல உடன்படுகிறாள். மறுநாள் கிளம்ப வேண்டும் என்பதற்காக பொருட்களை எல்லாம் பேக்கிங் செய்கிறார்கள். அப்போது தீவிர ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு, உயிருக்குத் துடிக்கிறான் ரோஸின் கணவன். வீடு முழுக்க பொருட்கள் குவிந்து குழப்பமாகிக் கிடக்கிற காரணத்தால் உயிரைக் காக்க உதவும் இன்ஹேலரைக் கூட தேடி எடுக்க முடியவில்லை. உண்மையில் ஃப்ளோரா கையில் இன்ஹேலர் கிடைக்கிறது. ஆனால், ரோஸ் தங்களை விட்டு பிரிந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அதைக் கொடுக்காமலே விட்டு விடுகிறாள். ஆம்புலன்ஸ் வருவதற்குள் இறந்து போகிறான் கணவன். இன்ஹேலர் ரகசியம் மற்ற சகோதரிகளுக்குத் தெரிந்தாலும் கூட, அதுபற்றி யாரும் வாய் திறக்கவே இல்லை.அடுத்த மர்ம முடிச்சு ஃப்ளோராவின் குழந்தையைப் பற்றியது. தன் ஒன்றுவிட்ட சகோதரனை ருச்சா பார்த்ததே இல்லை. ஏன்... ஃப்ளோராவுக்கே அவளது மகன் இப்போது எங்கே என்பது தெரியவில்லை. உண்மையில் அந்த மகன் ஃப்ளோராவின் சொந்த மகனில்லை. அதற்கும் ஒரு ஃப்ளாஷ்பேக்!யாஸ்மினின் கணவன் நடத்துகிற கட்டடம் கட்டுகிற நிறுவனத்தில் ஃப்ளோராவின் கணவன் பணியாற்றுகிறான். அங்கே நடந்த விபத்தில் அவன் ஊனமாகிறான். இதே கட்டத்தில் யாஸ்மினுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை ரகசியமாக ஃப்ளோராவுக்குக் கொடுக்கிறாள். இதில் யாஸ்மினின் கணவனுக்கு உடன்பாடு இல்லை என்பதால், பிரச்னை வெடித்து விவாகரத்தாகிறது. சில ஆண்டுகளிலேயே ஃப்ளோராவின் கணவனும் இறந்துபோக, மீண்டும் சகோதரிகள் மட்டும் கூட்டுக் குடும்பமாகிறார்கள்.இதற்கிடையே துருக்கி நாட்டுச் சட்டப்படி, அனுமதி பெறாமல் தத்து கொடுத்ததற்காக, அந்தச் சிறுவனை அரசாங்கமே எடுத்துச் சென்றுவிடுகிறது. குழந்தையை மீண்டும் மீட்கவே முடிய வில்லை. தாய்கள் தவிக்கிறார்கள். காலம் மெல்ல கடக்கிறது. யாஸ்மினுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்காக பிறந்த மண்ணான அலெக்சாண்டிரியாவுக்கு சகோதரிகள் செல்வதோடு படம் முடிகிறது. கடந்த கால சம்பவங்களை மூன்று தாய்களும் அவரவர் பார்வையில் சொன்னாலும், அனைவரும் உண்மையாகத்தான் சொல்கிறார்கள். மூவரின் வாக்குமூலங்களைச் சேர்க்கும் போதுதான் கதை நிகழ்கிறது. பிரபல ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவா, ரோஷோமன் படத்தில் கடைப்பிடித்த பாணியை ‘த்ரீ மதர்ஸ்’ என்ற இந்தப் படத்தின் இயக்குனர் டினா ஜுவி ரிக்லிஸ் நவீனமாகக் கையாண்டிருக்கிறார். நாடகத்துறையில் பட்டம் பெற்ற இந்த இஸ்ரேலிய பெண் இயக்குனர் பல டி.வி. தொடர்கள் மற்றும் குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது முழுநீளத் திரைப்படம். ஜெருசேலம் உள்பட பல படவிழாக்களில் விருதுகளைக் குவித்திருக்கிறது இந்தப் படம். படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் ‘த்ரீ மதர்ஸ் பார்ட்னர்ஷிப்' என்பது குறிப்பிடத்தக்கது. தன் மூன்று அம்மாக்களின் கதையையே படமாக்கியிருப்பதாகக் கூறும் டினா, தன் பாத்திரத்தையே ருச்சாவாக மாற்றியிருக்கிறார்.
(நன்றி: தினகரன் வெள்ளிமலர்)